நிறங்களுக்குள் ஒழிந்தோமா ? - கதிசித்தன்
பாராட்டுக் கவிதை
பச்சையும் மஞ்சளும் பறக்குது பார்
வெள்ளையும் நீலமும் அழகாய் தெரியுது பார்
ஒரு வண்ணக் கொடி
பல வண்ணக் கொடி
பெற்ற சுதந்திரம் பேணி காக்கப்பட்டதா?
பேருதவி ஏதும் செய்து காட்டப்பட்டதா?
அனுதினமும் அங்கலாய்ப்பு தான்
பலர் குரலிலும் பரிதவிப்பு தான் !
இன்பம் இமயம் போல் நன்மைகள்
வாய்ப்புகள் வானுயர வசதிகள்
இப்படித் தானே வந்தீர் எம் வாசலுக்கு
இத்துனூண்டாவது தந்தீரா?
இம்புட்டாவது நீட்டினீரா?
இளிச்சவாய் மக்கள் எமக்கே தான் !
கொஞ்ச நாள் போவுது
கொடியும் மாறுது
கொண்ட வண்ணமும் மாறுது
எங்களுக்கோ நரை தான் படருது
ஏதுமில்லா சனம்
பொறுத்துகிறோம் பரவாயில்லை !
ஆனா,
பேச்சைக் குறைக்கணும்
ஐயாக்கள் பேச்சைக் குறைக்கணும்
தேன் தெளித்து பால் கலந்து
நீவீர் நீட்டி முழக்கிப் பேசும்
பேச்சை குறைக்கணும்
ஐயாக்கள் பேச்சையாவது குறைக்கணும் !
இல்லாவிட்டால்,
கோபமாயிடும்
நெசமாவே கோபமாயிடும் !
கொட்டிவாக்கம்,
தமிழ்நாடு




