முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
வாசிப்போம் சுவாசிப்போம்

உதிரப் பூக்கள்... மது வர்மன் Part-01

அதிகாலை ஐந்து மணி ஜன்னல் வழியே லேசாக எட்டிப் பார்த்த சூரிய வெளிச்சம் கயலுக்கு எதிரியாக தெரிந்தது. மெதுவாக படுக்கையை விட்டு எழ முயன்றாள். ஆனால் அவளது வயிறு அவளுக்கு முன்னால் இருந்து "கொஞ்சம் நில்" என்பது போல பாரத்தை உணர்த்தியது. காலை நேர போராட்டம் வழக்கம் போல அந்த மோர்னிங் சிக்னல் அவளை வரவேற்றது. பல் துலக்க சென்றாலே அந்த வாசம் குமட்டலைத் தந்தது. சாப்பிடணும்னு நினைச்சாலே வாந்தி வருது. ஆனால் சாப்பிடலைன்னா குழந்தைக்கு பசிக்குமுன்னு பயமா இருக்கு என்று தனக்குள் புலம்பி கொண்டாள். காப்பியின் மனம் ஒரு காலத்தில் அவளுக்கு பிடிக்கும் இப்போது அதுவே அவளை ஓட வைத்தது.
இயற்கையில் காலம் முடிவிலாது பூத்துக் குலுங்கும் மலர்கள் வாடுவதும், பௌர்ணமி நிலவு தேய்ந்து அமாவாசையாவதும் என இயற்கையின் சுழற்சியில் நாட்கள் நதியை போல ஓட கயலுக்கு பெறுமாதமும் நெருங்கி கொண்டது.

தொழில் நிமித்தமான இடமாற்றம் என்பது ஆண்களுக்கு ஒரு பதவி உயர்வு அல்லது வருமான உயர்வு ஆனால் பெண்களுக்கு அது ஒரு வாழ்விட மாற்றம் மட்டுமல்ல அவளது ஒட்டுமொத்த உணர்வுகளின் இடமாற்றம் பழகிய தெருக்கள், உயிர் நண்பர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக நிழலாத் தொடரும் பெற்றோரை விட்டு பிரிந்து தனது காதல் கணவனான கார்த்தியுடன் வெளிநாட்டில் வசித்து வந்தாள்.

கார்த்தி வேலைக்கு சென்று வீடு திரும்பும் வரை அவனுக்காக தூங்காமல் விழித்து இருப்பது கயலுக்கு பழக்கப்பட்டு விட்டது. வழமை போலவே அவனுக்காக காத்திருந்தவளுக்கு அடி வயிற்றிலிருந்து கிளம்பி முதுகெலும்பை சுழற்றி பிடிக்கும் அந்த வலி அப்போது விட்டு விட்டு வர ஆரம்பித்தது.

பிரசவத்திற்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளது எதற்கு வலிக்கின்றது என்று புரிந்து கொள்ள முடியாதவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் சொரிய தொடங்கியது. கார்த்தியும் வேலையை முடித்து வீட்டுக்கு வந்தான். கயல் அழுவதை பார்த்ததும் மனம் உடைந்து அருகில் வந்து "ஏனம்மாய் அழுகின்றாய்? அம்மா ஞாபகம் வந்து விட்டதா? பிரசவ காலம் நெருங்கி விட்டது என்று பயப்படுகிறாயா ? நீ அழுதால் நான் தாங்கிக் கொள்ள மாட்டேன் என்று உனக்குத் தெரியும் தானே? என்ன என்று சொல்லு" என்று கயலின் கன்னங்களில் இரு கைகளையும் வைத்து கண் கலங்கினான்.

"எனக்கு லேசாக வயிறு வலிப்பது போல உள்ளது" என்று வலியை அடக்க முடியாமல் கார்த்தியை இறுக கட்டிபிடித்து அழுதாள்.

" அம்மாய் அழாத, கொஞ்சம் பொறுத்துக் கொள்ளு, நான் வண்டிய புடிச்சு கொண்டு வாரேன். நாங்கள் இப்போ ஆஸ்பத்திரிக்கு போவோம்." என இருளும் குளிரும் சூழ்ந்த அந்த நள்ளிரவு பொழுதில் ஒரு வித பயத்துடனும், நடுக்கத்துடனும் அருகில் உள்ள எல்லாருடைய வீட்டுக் கதவுகளையும் தட்டினான். வண்டி கிடைக்காமல் மனமுடைந்தான்.

"எள்ளுடன் எலிப் புழுக்கையும் சேர்ந்தே காய்ந்ததாம்" என்ற போல கார்த்தியும் தூங்காமல், எப்போது விடியும் விடியும் என்றே கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே தூக்கமின்றி அவளது வயிற்றினை தடவி தடவி ஆறுதலாக இருந்தவனுக்கு இனியும் தாமதிக்க முடியாது என்று நிலம் விடிய முன் கயலை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றான்.

கயலை பரிசோசித்த டாக்டர் பிரசவத்திற்குரிய ஆரம்ப வலி தான் இப்போது வந்துள்ளது ஆஸ்பத்திரியில் நிற்குமாறு கூறினர். வெளிநாட்டிற்கு வந்து ஒன்றரை வருடங்களேயான கயலுக்கு, அந்நாட்டின் மொழி ஒரு பிரச்சனையாகவே இருந்தது.

"உன்னுடன் யாரும் இல்லை என்று கலங்காதே, உனக்கும் நம் இருவரின் காதலின் அடையாளமாக பிறக்க இருக்கும் எங்கள் பட்டுக்குட்டிக்கும் நான் சிறந்த கணவனாகவும், தந்தையாகவும் மட்டுமல்ல தாயுமானவனாய் எப்போதும் பக்க பலமாக இருப்பேன்." என அவளுக்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் விதைத்து கொண்டிருந்தான் கார்த்தி.

நேரம் இரவு 8.45 கயலின் உடல் நிலையை மேற்பார்வை செய்ய வந்த டாக்டர் "இரவில் ஆண்கள் நிற்க முடியாது. நீங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள். தேவைப்பட்டால் நாங்கள் உங்களை அழைக்கின்றோம்." என்றார்.

"என் மனைவிக்கு மொழி தெரியாது. அவளுக்கு உதவிக்கு யாரும் இல்லை. அவளை விட்டு என்னால் போக முடியாது. அவளுக்கு எல்லாமே நான் தான்." என்று கயலின் கைகளை பற்றி பிடித்துக்கொண்டு "கருமுகில் சூழ்ந்தது போல் கண்கள் இருண்டு அடை மழை நீர் சொரிவது போல அவனது கண்களில் இருந்து கண்ணீர் கொழ கொழ என கொட்டியது.

கயல் கார்த்தியின் கண்களில் இருந்து கொட்டும் கண்ணீரை தன் கைகளால் துடைத்து, "கலங்காதே எனக்கு தைரியம் தந்த நீ அழலாமா?" என்றாள்.

கயலின் மீது கார்த்தி வைத்துள்ள அன்பின் ஆழத்தை பார்த்த டாக்டருக்கு கவலையை உண்டாக்கியது.

"நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். உங்கள் மனைவியை நாங்கள் நன்றாக கவனிப்போம். பிரசவ வலி அதிகரித்தால், உங்களை பிரசவ அறைக்குள் அழைப்போம். இப்போது நீங்கள் வீட்டுக்கு செல்லுங்கள்" என்று அனுப்பினார்.

கயலை தனியாக விட்டு பிரிய முடியாத ஏக்கத்துடன் நான் இல்லாமல் எப்படி இருப்பாளோ? தெரியல என மனசுக்குள் தவித்த வண்ணம் "நான் வீட்ட போயிட்டு வாரேன் அப்பு நீ ஒன்றுக்கும் யோசிக்காதே. அவங்க உன்னை அடிக்கடி வந்து வந்து பார்ப்பாங்க. உனக்கு ரொம்ப முடியாமல் வந்தால் எனக்கு கோல் பண்ணு செல்லம் நான் போயிட்டு வாரேன்" என நெற்றியில் முத்தமிட்டு

சென்றான்.

நேரம் நள்ளிரவு ஒரு மணி ஒவ்வொரு நொடியும் யுகமாக நீள அவ்வப்போது வரும் கடும் வலியால் சுருண்டு கொண்டிருந்த கயலுக்கு கார்த்தியின் தொலைபேசி அழைப்பு வருகின்றது.

கார்த்தி என்றுகொண்டே குரல் கரகரக்க அனுங்கினாள் கயல்.

"ஏனம்மா உன்னை தனியாக விட்டுட்டு வந்துட்டேன் என்று கவலைப்படுகிறியா..??"

" இல்லை கார்த்தி. நிமிடத்திற்கு நிமிடம் வலி அதிகரித்துக்கொண்டே போகுது. வலியை என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. யாரோ ஒரு ராட்சசன் எனது இரு இடுப்பு எலும்புகளையும் கயிற்றால் கட்டி இருபுறமும் இழுத்து பிளப்பது போலவும், அடி வயிற்றில் நெருப்பை அள்ளிக் கொட்டியது போலவும், முதுகெலும்பில் மின்னல் பாய்வது போலவும் இருக்கு" என்று பல்லை நொருக்கிக்கொண்டே அனுங்கினாள்..

"ஐயோ கடவுளே! அம்மாய் பக்கத்தில டாக்டர் இல்லையா?"

"இல்லை கார்த்தி எனக்கு உடம்பு எல்லாம் வியர்த்துக் கொட்டுது. நான்கு பக்க சுவருக்குள் நிற்கவும் முடியாமல், நடக்கவும் முடியாமல், குனியவும் முடியாமல், நிவிரவும் முடியாமல் இருக்கு. எனக்கு இந்த நேரத்துல யாராவது உதவ மாட்டார்களா? ஏன் எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை, சுவாசிக்க கூட இந்த வலி என்னை விட மாட்டேங்குது. ஐயோ! அம்மா! சிதைந்து போன என்னுடைய ஆடைகளை கூட என்னால மூடி மறைக்க முடியாமலும், கூச்சலிட்டு கத்தவும் முடியாமலும் பல்லை கடித்துக் கொண்டு இந்த இருண்ட அறைக்குள்ள நீண்ட போர் பயணத்தில மரண வாசல் வரைக்கும் போன போல சித்திரவதையை தனிமையில் அனுபவிக்கிறேன் சீக்கிரமா வா கார்த்தி" என்று கயல் கட்டிலில் புரண்டு நெளிந்தாள்.

"அம்மாய் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளம்மா. இதோ நான் வீட்டில் இருந்து வெளிகிட்டன். இப்ப வந்திடுவேன். நீ தைரியமா இரு வாரேன்" என தொலைபேசியை துண்டித்துக் கொண்டான்.

மருத்துவர்கள் தங்களுடைய ஆடைகளில் தயாராகிக் கொண்டிருந்தனர்.

வலியின் ஒவ்வொரு துடிப்பும் கயலின் நரம்புகளை வாட்டினாலும், எங்கே கார்த்தி என அவரது விழிகள் தேடின.

"வானில் தோன்றி மறையும் மின்னல் போல" கண்கள் இமைக்கும் நேரத்தில் கார்த்தி கயல் முன் வந்து நின்றான்.

மூச்சடக்க பதறி துடித்து ஓடி வந்தவன் "நான் வந்து விட்டேன் அம்மாய்" அவளது நெற்றியில் முத்தமிட்டு தடவி தடவி அவளது நெற்றியில் வடிந்த வியர்வையை துடைத்துக்கொண்டே நம் பட்டுக்குட்டிக்காக மூச்சை நன்கு எடுத்து எடுத்து விடு அப்போதுதான் எங்கடா பட்டு சீக்கிரம் வெளியில வந்துடுவாள். இவ்வளவு நேரம் வலியை தாங்கினாய்.. இன்னும் கொஞ்ச நேரம் தான். உன்னால் முடியும் முடியும்" என்று தைரியத்தை கொடுத்தான். அந்த நொடியில் தான் அந்த சிறிய அறையில், மின்குமிழ் வெளிச்சத்தில், ஒரு பெண்ணின் வலிமையை அவன் முதல் முதலாக பார்த்தான்.

சுவரில் தொங்க விடப்பட்ட கடிகார முட்கள் அதிகாலை 3.28 காட்டியது. அந்த அறையே அதிரும்படி காதை கிழித்துக்கொண்டு பிஞ்சு குழந்தையின் வீறல் சத்தம் கேட்டது. கார்த்தி கண்களில் கண்ணீர் வழிய வழிய கயலின் தலையை வாரி முத்தமிட்டு உலகமே தன் கையில் இருப்பது போன்ற ஒரு பெருமிதத்துடன் "வா என் தங்க மகளே" என தன் பட்டுக்குட்டியை மெதுவாக கைகளில் ஏந்தினான்.

" அம்மாய் எங்கள் பட்டுக்குட்டி எங்களை பெற்றோர் ஆக்கிவிட்டாள். எனக்கு அப்பா என்னும் புதிய அவதாரத்தை தந்துவிட்டாள். " என ஆனந்தத்தில் தரைகால் புரியாமல் துள்ளிக் குதித்தான்.

தொடரும்......

பகிர்க

இதே பிரிவின் மேலும் பதிவுகள்

  • வாசிப்போம் சுவாசிப்போம்

    “என்னைப் போல” - ஆதவன் சரவணபவன்

    முன்னால் நீண்டு போகும் வானம் முடிவில்லாமல் தொடரத் தான் போகிறது. பயணத்தை வானம் போல நீட்ட முடியாது. குளிர் காற்று புற்தரையைத் தாண்டி மென்மையாகத் தழுவிக் கடப்பதை…

    மேலும் வாசிக்க →
  • வாசிப்போம் சுவாசிப்போம்

    அவளாகி வந்தவள் -கனக.தீபகாந்தன்

    வழமையைப் போல சிவத்தார் தனது பேரப்பிள்ளைகளை கல்லூரிக்குக் கூட்டிச் செல்ல ஆயத்தமானார். காலை ஏழு மணியாகியிருந்தது, பேத்தி ரேணு இன்னும் தலை பின்னவில்லை என சிணுங்கிய வண்ணம்…

    மேலும் வாசிக்க →
  • வாசிப்போம் சுவாசிப்போம்

    பாத்தியதை என்ற நாவலை முன்வைத்து - வேலையா சதீஸ்குமார் (திருகோணமலை)

    இலக்கியம் என்பது உண்மையில் ஆழப் பதிந்த சமூகப் பிரக்ஞையின் வெளிப்பாடு என்பார் பேராசிரியர் கா. சிவத்தம்பி. உலகில் வாழும் ஈழத்தின்…

    மேலும் வாசிக்க →