பாத்தியதை என்ற நாவலை முன்வைத்து - வேலையா சதீஸ்குமார் (திருகோணமலை)
இலக்கியம் என்பது உண்மையில் ஆழப் பதிந்த சமூகப் பிரக்ஞையின் வெளிப்பாடு என்பார் பேராசிரியர் கா. சிவத்தம்பி. உலகில் வாழும் ஈழத்தின் புலம்பெயர் தமிழர்களின் வெளிப்பாடுகளாக வெளிவரும் படைப்புகள் உலகத் தமிழர் இலக்கியப் பரப்பில் ஒரு புதிய அடையாளத்தையும் உத்வேகத்தையும் கொண்டு முன்னேறி வருவதை நாம் காண்கிறோம். புலம்பெயர் இலக்கியம் என்றால் என்ன என்கின்ற கேள்விக்கு பொதுவாக ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களினால் எழுதப்படுகின்ற இலக்கியம் என அர்த்தம் கொள்கிறோம். ஆயினும் இவர்கள் அனைவரும் ஒரே விதமானவர்கள் அல்லர் அவர்களின் துயர அனுபவங்களும் வாழ்வின் வலிகளும் சற்று வித்தியாசமானவை வேறுபட்டவை இவ்வாறு ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்களை நாம் மூன்று வகைகளில் வகைப்படுத்தலாம்
ஒன்று : போருக்கான அனுமானங்கள் உருவான ஆரம்ப கட்டத்திலேயே புலம்பெயர்ந்தவர்கள் முதலாம் வகையினர். இவர்கள் 1980 ஆம் ஆண்டிற்கு முன்பதாக இலங்கையிலிருந்து வெளியேறியவர்கள் ( ஈழத்து இலக்கியத் தடம் ,கா.சிவத்தம்பி ) இவர்கள் மிகவும் வசதி படைத்தவர்கள் படித்தவர்கள் இருநாட்டு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு சட்டரீதியாக குடியுரிமை பெற்றவர்கள்
இரண்டு: 1980 க்கு பின்னர் குறிப்பாக 1983 களில் ஏற்பட்ட தீவிர போர் சூழல் காரணமாக தமது உடமைகளை உறவுகளை இழந்து தங்களது உயிரை தற் பாதுகாத்துக் கொள்ள புகலிடம் தேடி பிறதேசங்களுக்கு சென்றவர்கள்
மூன்று: 2009 இல் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இறுதிப் போரால் பாதிக்கப்பட்டு தமது உறவுகளையும் உடைமைகளையும் இழந்து அந்நிய புலம்பெயர் தேசங்களுக்கு புகலிடம் தேடி அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்கள் மேலே கூறப்பட்ட இரண்டாம், மூன்றாம் வகையினர் தமது வாழ்வில் சொல்லொண்ணா துன்பங்களையும் மறக்க முடியாத வாழ்வின் வலிகளையும் அனுபவித்தவர்கள் இவர்களில் பலர் தமது உறவுகளின் இழப்பினாலும் தாம் தமது மண்ணிலிருந்து அகற்றப்பட்ட விரக்தியினாலும் பெரும் மனவேதனையில் உழல்பவர்கள் இவ்வாறான மக்களின் பிரதிநிதிகளாக எழுதி வரும் எழுத்தாளர்களின் படைப்புகள் எவ்வாறு அமையும் என்பதை இலகுவாக நாம் புரிந்து கொள்ள முடியும் இவர்களின் படைப்புகளில் இவ் வலிதோய்ந்த நினைவுகள் ஆழமாக பதிவு செய்யப்படுகின்றன
இவர்களின் படைப்புகள் பற்றி அறிந்து கொள்ள பின்வரும் வகைப் பிரிப்பு இலகுவானதாக இருக்கும்
1. பிரதேசங்கள் சார் பதிவுகள் ஊடாக கதை சொல்லல்
விமல் குழந்தை வேல் அவர்களின் வெள்ளாவி , கலாநிதி N.நடேசன் அவர்களின் வண்ணாத்தி குளம், அ. பாலா மனோகரின் வட்டம் பூ என்பவற்றை கூறலாம்.
2. தாயகத் தமிழரின் வரலாற்றுப் பார்வையின் ஊடாக கதை சொல்லல்
சே. யோகநாதனின் நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே மற்றும் தேவகாந்தனின் கனவுச்சிறை ஆகியவற்றை உதாரணங்களாக கூறலாம்
3. பண்பாட்டுக் கோலங்கள் வாழ்வியல் நோக்குகளை கதைகளாக சொல்லல்
இவ்வகையில் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ஒரு கோடை விடுமுறை போன்ற கதைகளையும் செ.கணேசலிங்கனின் செல்வி, கோடையும் பனியும் முதலியவற்றை கூறலாம்
4. தமிழர் வாழ்வின் பாரம்பரிய குணாம்சங்கள் ( சாதி பிரச்சனை, சீதனக்கொடுமை ) புகலிடச் சூழலிலும் தொடர்வதை சொல்லல்
இவ்வாறான கதைகளை எழுதியவர்களில் பார்த்திபன் முக்கியமானவர்
5. போராட்ட இயக்கங்கள் மற்றும் போர்ச்சூழல் பற்றிய விமர்சனங்களையும் கதையாகச் சொல்லல்
கோவிந்தனின் புதியதோர் உலகம், செழியன் ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து சோபா சக்தியின் கொரில்லா போன்ற நாவல்களை கூறலாம்
6. சுய வரலாறுகளாக கதை சொல்லல்
இதற்கு உதாரணங்களாக ஆனா இரவியின் காலம் ஆகி வந்த கதை மற்றும் அ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புக்கள் ஆகியவற்றை கூறலாம்
7. புலம்பெயர்வு ஏற்படுத்திய இன்னல்கள் பற்றியும் அந்நியப் பட்டுப்போன வாழ்க்கை பற்றியும் கதை சொல்லல் இவ்வகை படைப்புகளாக பொ.கருணாகரமூர்த்தியின் ஒரு அகதி உருவாகும்நேரம் , தியாகலிங்கத்தின் நாளை ஆகியவற்றை குறிப்பிடலாம்
(புலம்பெயர் படைப்பாளிகள் கதைகளின் மேலேகுறிப்பிட்ட வகைப்படுத்தல் முழுமையானது அல்ல. இது இன்னமும் ஆழமான ஆய்வுக்குரியது)
இவ்வகை படைப்புக்களைப் போலவே ஒரு தவிர்க்க முடியாத படைப்பாக சமீபத்தில் வெளி வந்து இருப்பதுதான் பாத்தியதை எனும் நாவல்.
இக்கதையின் பிரதான பாத்திரமான கௌரி திருகோணமலை தென்னை மரவடி எனும் கிராமத்தை சேர்ந்தவர் இவரின் கணவர் சங்கரலிங்கம் என்னும் விவசாயி. 1983 ஆம் ஆண்டு ஜூலைக் கலவரக் காலப்பகுதியில் தென்னை மரவடியில் ஏற்பட்ட இனக் கலவரம் காரணமாக கௌரி தனது கணவனை இழக்கிறார். இவரது ஒரே மகனான சிவாவுடன் மயிரழையில் உயிர் தப்பி புலம்பெயர்ந்து கனடா நாட்டுக்கு செல்கிறார். அவர் அங்கிருந்த போதும் அவரது எண்ணங்களினாலும் உணர்வுகளினாலும் தனது மண்ணை நேசித்தபடியே வாழ்ந்து இறந்து போகிறார். இந்நிகழ்வால் பெரிதும் துயருற்ற மகன் சிவா தன் தாயின் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள தான் பிறந்த சொந்தக் கிராமத்துக்கு வருகை தருகிறான். தனது சொந்தங்களோடு உறவாடுகிறான். தான் பிறந்த வளவில் கால் வைக்கிறான். தனது அன்னையின் ஆசையை நிறைவேற்றுகிறான் என்பதாக முடிகிறது கதை. ஏற்கனவே சிறுகதைகளிலும் நாவல்களிலும் இதுபோன்ற தாய் நிலம் மீதான ஏக்கத்தை நாம் தரிசித்திருந்த போதிலும் இக்கதையானது தான் சொல்லப்படும் நேர்கோடற்ற முறைமை உத்தியினாலும் (Nonlinear Narrative Method) அதன் அரசியல், வரலாறு, உளவியல் மற்றும் தத்துவார்த்தவியல் போன்ற வெவ்வேறு தளங்களினூடான இயக்கத்தினாலும் தனித்துவம் பெறுகிறது.
கௌரியின் தாய் நிலமானது வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் கிராமமான தென்னை மரவாடி எனும் கிராமம். இப்படைப்பில் எழுத்தாளர் இதன் வரலாற்று பின்னணியையும் இவர்கள் வாழ்ந்த காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய சிங்கள குடியேற்றத்தையும் அடையாளப்படுத்துகிறார். இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த மிக முக்கியமானதும் மோசமானதுமானதுமான இவ்வகை குடியேற்றங்களின் காரணமாக இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதும் தமிழர் வாழ்வில் இன்று வரை இவை வரலாற்றின் கறை படிந்த சம்பவமாக காணப்படுவதும் குறிப்பிடதக்கது.
இவ்வினக்கலவரம் காரணமாக கௌரியின் வாழ்வின் மாற்றம் ஏற்பட்டு அவர் தனது மகனுடன் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். கௌரி தனது மகன் சிவா அவனது மனைவி சோபி அவர்களின் மைந்தன் விஷ்ணு அகியோருடன் மகிழ்வுடன் கனடாவில் வாழ்ந்து நருவதாக இக்கதையை எழுத்தாளர் ஆரம்பிக்கிறார். அவரது மகனின் குடும்பத்துடன் அவர் பாசத்துடன் அந்நியோன்னியமாக இருந்தாலும் அவரால் தனது மண் மீதான பற்றினையும் ஏக்கத்தினையும் உடலால் பிரிந்திருந்தும் உள்ளத்தால் விடுபட முடியாத சோகத்தையும் குறிப்பிடுவதற்கு இருவகை பிரதான உத்திகள் கையாளுகிறார்.
ஒன்று உளவியல் ரீதியானது இதனை “கௌரியின் நாள் குறிப்பேட்டில் இருந்து” என்று வரும் அத்தியாயங்களில் கௌரியின் உள்ளக் கிடக்கையை அவரது எண்ணங்கள், தத்துவார்த்த சிந்தனைகள் போன்றவற்றின் மூலமாக குறிப்பிடுகிறார். அத்துடன் கௌரியின் உள உணர்வை வாசகன் புரிந்து கொள்வதற்கான விசேட உத்தியாகவும் இதனை வடிவமைக்கிறார்.
இரண்டாவது கௌரிக்கும் அவரது மகனுக்கும் இடையிலான உரையாடலில் தொனிக்கும் அவரது எதிர்பார்ப்பு ஆகும். தனது நிலத்துக்கு செல்லவேண்டுமென்ற அவளது அவா அவ்வப்போது இவ்வுரையாடலில் வெளிப்படுகிறது.
இக்கதையில் ஆரம்ப அத்தியாயங்களிலேயே கௌரி இறந்துவிட்டாலும் அது வாசகனுக்கு அதிர்வினை ஏற்படுத்தவில்லை ஆயினும் அவள் வாழ்ந்த கனவு நிலத்தை அவளது சொந்த மண்ணை அவளது மகன் அடையும்போது வாசகனின் மனதை கனக்க வைக்கிறார் எழுத்தாளர். இவ்வகையிலும் மற்றைய அனேக எழுத்துக்களில் இருந்து இப்படைப்பு வேறுபடுகிறது.
அடுத்ததாக இக்கதையின் முக்கிய விடயமாக கருத வேண்டியது அது கொண்டுள்ள வரலாற்றுப் பார்வையே. எழுத்தாளர் இதனை ஒரு உண்மைச் சம்பவங்கள் கலந்த புனைகதையாக கூறுகிறார் குறிப்பாக தென்னை மரவாடியின் பின் புலத்தகவல்கள் மற்றும் சிலை மேல் கறையாக பதிந்ததாக குறிப்பிடப்படும் இனக் கலவரங்கள் ஆகியவற்றை இதற்கு உதாரணங்களாக கூறலாம்.
எனினும் கட்டுநாயக்கா எனும் இடக் குறிப்பு ஏன் இக்கதையில் குறிப்பிடப்பட்டது என்பது புரியவில்லை இதனை தவிர்த்து இருந்தாலும் இப்புதினம் கூறும் கதையில் மாறுதல் எதுவும் ஏற்பட்டிருக்க போவதில்லை.
சில அத்தியாயங்களில் குட்டிக்கதைகள் சில இந்நாவலில் இருப்பதும் இக்கதைகளின் மூலம் எழுத்தாளர் சொல்லவரும் செய்தியும் சாதாரண வாசகனுக்கு சற்று புரிவதற்கு கடினமாக இருக்கலாம் இது கதைக்குள் சம்பந்தமற்றது எனவும் தோன்றலாம். ஆயினும் சொல்லப்படும் கதைக்கும் இவ்வகைக் குட்டிக் கதைகளுக்குமான தொடர்பிணைப்பினை கதையின் ஆழ்ந்த வாசிப்பில் புரிந்து கொள்ளலாம். வருக்கண் பலாப்பழம் மற்றும் பத்தர் சிலை குட்டிக்கதைகள் இவ்வகையினவே.
சிங்கள ராசா எனும் குட்டி கதை கூற வந்த விடயம் தாய் பாசம் பற்றியதே அதனை சிவா தன் தாயின் மீது கொண்டுள்ள அன்பையும் அதற்காக அவன் எடுக்கும் முயற்சியும் என பிரதியீடு செய்யலாம். இக்குட்டிக் கதை மூலம் எல்லா இனத்தவர்க்கும் உணர்வுகள் என்னவோ பொதுவானவை தான் என்கின்ற கருத்தும் வெளிப்படுத்தப்படுகிறது.
இக்கதை சற்று நிதானமாக, ஒரு ஆற்றில் பயணிக்கும் துடுப்புவள்ளம் போல மிகமெதுவாகவே தனது உரைநடையின் முலம் நகர்கிறது. அதன் பயணத்திலும் கூட சில குறுக்கீடுகள் என்று வாசகனை எண்ணும் வகையில் நாம் மேலே கூறிய விடயங்கள் அதன் வேகத்தை மேலும் குறைப்பதுவும் உண்மையே. எனினும் இக்கதை சொல்லி இக்கதை அவ்வாறே அமைய வேண்டும் என்று திட்டமிட்டே கட்டமைக்கிறார். இக்கதைக்கு தேவையான கருத்தினையும் சொல்ல வேண்டிய விடயங்களை இவ்வாறான தனது சிந்தனாவாத உட்கூறுகளால் உணர்த்துவதற்கு அவருக்கு அவை உதவுகின்றன. இது கதையின் உண்மைத் தன்மைக்கும் அதன் வரலாற்றியல் புரிதலுக்கும் புலம்பெயர்வின் உளவியல் தாக்கத்தை மற்றும் ஆக்கிரமிப்பின் அரசியலை உணர்த்துவதற்கும் வலுச் சேர்க்கின்றன என்றால் அது மிகையல்ல
ஈழத்தில் ஏற்பட்ட காலத்துயர் பற்றியும் இனக் கலவரத்தால் தமிழ் மக்கள் பலர் வேரோடு பிடுங்கப்பட்டு புலம்பெயர் தேசங்களில் எறியப்பட்டது பற்றியும் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள ஏதுவாக அது தொடர்பான சம்பவங்களோடும் வரலாற்றியல் தகவல்களுக்கூடாகவும் இக்கதை சொல்லப்படுவது பாராட்டத்தக்கது. தாய் மண்ணில் கொண்டிருக்கும் அதீத பற்றினை தமது வாழ்விடம் மீதான காதலை வெளிப்படுத்தும் கதை யாதலினால் இக்கதையின் தலைப்பும் மிகப் பொருத்தமாக அமைகிறது பாத்தியதை என்றால் உறவு மற்றும் உரிமை எனும் அர்த்தங்களை குறிக்கும் சொல். கௌரி எனும் பெண்ணின் தாய் நிலத்தின் மீதான பாத்தியதை மறுக்கப்பட்டதின் எதிர்வினையாக இக்கதையை கூறலாம்.
பொதுவாக புனைகதையின் இலகு வடிவமாக உரையாடல்கள் அமைவது உண்டு எனினும் இக்கதையில் கௌரி-சிவா-ஷோபி-விஷ்ணுவின் உரையாடல்கள் மற்றும் குகன்-சிவா உரையாடல்கள் நீங்கலாக உரைநடையாகவே இக்கதை எழுதப்பட்டுள்ளது அவதானிக்கத்தக்கது. இதனை எழுத்தாளர் சற்று கவனித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
கௌரி என்கின்ற பெண்ணின் வாழ்வினூடு ஈழத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அரசியல் மற்றும் வாழ்வியல் இன்னல்களை பொதுமை படுத்தி அதனை வரலாற்று பதிவாக ஆவணப்படுத்த முயன்று இருக்கிறார் இக் கதை சொல்லி. அதில் அவர் வெற்றியும் கண்டு இருக்கிறார்.
(2014 ஆம் ஆண்டு வரையான உண்மை மற்றும் கற்பனை கலக்கப்பட்ட கதையென்றும் 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னரான தகவல்கள் இக் கதையில் இல்லை எனவும் தனது அடிக்குறிப்பில் கதையாளர் கூறுகிறார் குறிப்பிடுகிறார். இன்றைய 2024 ஆம் ஆண்டில் தென்னை மரவாடி கிராமத்தில் சுமார் 60 வரையான குடும்பங்கள் மட்டுமே குடியேறி உள்ளதாகவும் அவர்களின் அத்தியாவசிய அடிப்படை வசதிகள் சற்று வளர்ச்சி அமைந்துள்ளன எனவும் அறியக் கிடைத்தது.அரசியல் மேம்பாடு குறித்து நான் கூறவேண்டியதில்லை அது நீங்கள் அறிந்ததே.)




