குறுங்கதை. ..ஷெல்லிதாசன்...
============ =============
என்னைப் பார்த்துச் சொல்லு..!
"என்ன மச்சான் உனக்கு காசு மிஞ்சிட்டுது போலை"
"ஏனடாப்பா...ஏன்?"
'உன்னை காலையிலை நான் சந்திச்சிட்டுப் போகேக்கை என்ன நேரமிருக்கும்?'
" கிட்டத்தட்ட ஒம்பது மணியிருக்கும் "
"இப்ப என்ன நேரம் தெரியுமே...பத்தரை மணியும் ஆகேல்லை."
"அதுக்கென்ன இப்ப...என்ன நடந்துபோச்சு ?"
"என்ன நடந்து போச்சோ?"
"நான் காலையிலை உன்னட்டை வரேக்கைதான் உவங்கள் ரண்டுபோர்
மண்வெட்டி அலவாங்கோடை இங்கை வேலைக்கு வந்தவங்கள். இப்ப நான்
திரும்பி இங்கை வர்ரதுக்கிடயிலை...ஒண்டரை மணித்தியாலமும் இல்லை வேலையெல்லாம் முடிச்சிட்டு உன்னட்டை காசுக்கு நிக்கிறாங்கள். அதுவும் சும்மாவே சுளையா ஐயாயிரம்
கேக்கிறாங்கள்."
"சரி..சரி..முதலிலை நான் அவங்கள் கேக்கிற காசைக் குடுத்திட்டு வாறன்.
அவங்களிட்டை பேரம்பேச நான் தயாரில்லை...கொஞ்சம் பொறு"
என நண்பனை சமாதானப்படுத்தி,
எனது வீட்டுக்கு வந்த அந்த இரு வேலையாட்களையும் அணுகி ,அவர்கள் கேட்ட கூலியை முழுவதாக கொடுத்துவிட்டு நண்பனிடம் வந்தேன்.
"சரி மச்சான்....இப்ப சொல்லு நான் அவங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுத்தது பற்றித்தானே உனக்குப் பொறுக்க முடியல்லை...அப்படித்தானே"
என்றேன் எனது நண்பனிடம்.
"ஓமடாப்பா....ஓம்..ஒருதனி்ன்ரை ஒருநாள் கூலி ரண்டாயிரமெண்டாலும்
ரண்டுபேருக்கும் நாலாயிரந்தான் வரும். உன்னட்டை வேலைக்கு வந்தவங்கள் ஒண்டரை மணித்தியாலங்கூட சரியா வேலை செய்யாமல் சுழையாய் ஐயாயிரம் வாங்கி உன்னைப் பேக்காட்டிட்டுப் போட்டாங்கள். உன்னைப்போல ஏமாந்த சோணகிரிகள் இருக்கும் வரைக்கும் ஏமாத்திறவங்களின்ரை காட்டிலை மழைதான் எண்டு சொல்லு" என்று எனது நண்பன் என்னைப்பார்த்து ஏளனம் செய்தான்.
நண்பனின் ஏளனத்துக்கு இனியும் வாய்ப்பளிக்க விரும்பாத நான்,
"மச்சான் அவங்களுக்கு ரண்டு மணித்தியாலமுமில்லாத வேலைக்கு நான் ஐயாயிரம் ரூபா குடுத்தது பிழைதான். சரி அதை விடு. அதே வேலைக்கு உனக்கு ஒரு லட்சம் ரூபா வாங்கித் தாறன்...நீ செய்யிறியா?"
"அப்பிடி ஆர் தரப்போறாங்கள். உன்னைப்போல அவங்களும் ஏமாளியளாத்தான் இருக்கும்." என்ற நண்பன், "அப்பிடி என்ன பெரிய வேலையே....நான் செய்யிறன் கேட்டுச் சொல்லு"என்றான்.
"முதலிலை என்ரை வீட்டிலை அவங்கள் ரண்டுபேரும் என்ன வேலை செய்தவங்கள் எண்டு உனக்குத் தெரியுமோ?"
"அதுதான் நான் போய் வர்ரதுக்கிடையிலை வேலையை முடிச்சிட்டு உன்னட்டை அவங்கள் காசு கேக்கேக்கைதானே நான் வந்தனான்.
எனகுத் தெரியுமே?".
இஞ்சை பார் மச்சான்...எங்கடை கழிவறையிலிருந்து கழிவறைத் தொட்டிக்குப் போற குழாய் அடைச்சதாலை எங்களுக்கு கழிவறையை பாவிக்க முடியாது அடுத்தடுத்த வீடுகளுக்கு ஓட வேண்டிய நிர்ப்பந்தமா போச்சுது. இரண்டு மூண்டு நாளா நான் நாய் ஓட்டமோடியும் என்ன வேலையெண்டு கேட்டதும் ஒருதனும் வர ஏலாதெண்டு கைவிரிச்சுப்போட்டாங்கள். கடைசியிலை இவங்கள்தான் தாங்கள் செய்து தாறதா வந்தவங்கள். அவங்கள் வேலை செய்யேக்கை வந்த துர்நாற்றத்தை சகிக்க முடியாமல் நாங்கள் வீட்டுக் கதவு யன்னல்களை இறுக்கப் பூடிப்போட்டிருக்க, குழிக்குப் போற குழாய்களை தோண்டியெடுத்து கழட்டி அடைச்ச கழிவுகளை தங்கடை கையளாலை துப்பரவு செய்து சீராக்கி
மீண்டும் பொருத்தி கழிவறையை நாம் பாவிக்க ஏற்றதாக தமது சுகாதாரத்தையும் துச்சமாக மதித்து செய்து தந்த அவங்களுக்கு நான் ஐயாயிரம் கூலி கொடுத்ததுக்கு பெரிசா துள்ளுகிறாய்.
நான் உன்னைக் கேக்கிறன் உனக்கு ஒரு லட்சம் ரூபா தந்தாலும் உன்னாலை
அப்பிடியான வேலையை செய்யமுடியுமா...என்னைப் பாத்துச் சொல்லு" என்றேன் நண்பனிடம்.
" உண்மைதான் மச்சான். என்னாலை அப்பிடி ஒரு வேலையை நினைச்சும் கூட பாக்கேலாது. நேரத்துக் கேத்த கூலியல்ல...வேலைக்கேற்ற கூலிதான்
நீ கொடுத்தது. இப்ப எனக்கு விளங்குது.
ஐயாயிரம் காசை வைச்சு அதனை நான் எடைபோட்டது மகா தவறுதான் மச்சான். என்னை மன்னிச்சுக் கொள்"
எனச் சொல்லி அவன் மௌனமானான்.




