அவளாகி வந்தவள் -கனக.தீபகாந்தன்
வழமையைப் போல சிவத்தார் தனது பேரப்பிள்ளைகளை கல்லூரிக்குக் கூட்டிச் செல்ல ஆயத்தமானார். காலை ஏழு மணியாகியிருந்தது, பேத்தி ரேணு இன்னும் தலை பின்னவில்லை என சிணுங்கிய வண்ணம் அம்மாவின் பின்னால் வாலைப்போல தொடர்ந்து கொண்டிருந்தாள். பேரன் அமுதன் பாதணிகளுக்குள் தனது பாதங்களை இலகுவாக செருகி நாடாவை கட்டி முடித்தான்.
அனைத்தையும் அவதானித்துக் கொண்டிருந்த சிவத்தார் தானும் சாய்வு நாற்காலியில் இருந்து உடலை முன்னகர்த்தி எழுந்து கொள்ள ஆயத்தமானார். மகன் வண்ணன் இப்போதுதான் படுக்கையறையை விட்டு வெளியேறுவதை பார்த்து தலையை தாழ்த்திக் கொண்டார். ஒரு வழியாக மருமகள் அமுதா இரு பிள்ளைகளையும் ஆயத்தம் செய்து முடித்திருந்தாள். காலை உணவாக பிள்ளைகளுக்கு பாடசாலை விதிமுறைகளின் படி அன்றையநாள் கொடுக்க வேண்டிய அவித்த பயறு கொடுத்தாள்.
வாசலுக்கு பிள்ளைகளுடன் வந்த அமுதா "மாமா இன்று பிள்ளைகளை வெளிகிடுத்த கொஞ்சம் நேரமாகிட்டு.. விரைவாக போனீங்க என்றால் நல்லது" என்று சொல்லிக்கொண்டே தனது கையில் இருந்த ஆயிரம் ரூபாய்த் தாளை நீட்டி "மாமா வரும்போது ஒரு கிலோ வெங்காயமும், பச்சை மிளகாய் கால் கிலோவும் மரக்கறியும் நல்லதா பார்த்து வாங்கி வாங்கோ இன்னைக்கு வெள்ளிக்கிழமையெல்லோ" என கூறியவண்ணம் பணத்தை மாமாவின் கைகளுக்கு மாற்றினாள். சிவத்தாரும் மறுப்பேதும் தெரிவிக்காது "சரி பிள்ளைகளை விட்டிட்டு சலீம் தம்பியின் கடையில வாங்கிவாரன்" என்று மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கொண்டு செல்லும் பையையும் எடுத்துக்கொண்டார். வீட்டில் இருந்து பதினைந்து நிமிடத்தில் செல்லக்கூடிய தூரத்தில்தான் பேரப்பிள்ளைகள் படிக்கும் கல்லூரி இருந்ததால் காலையில் அவர்களை நடையிலேயே கொண்டு சென்று விடுவது அவருக்கு நடைப்பயிற்சியுடன் உடல் ஆரோக்கியத்தையும் பெறுவதற்கு உதவியாக அமைந்தது.
ஆறு கால்களும் வேகமடைந்து நடக்கும்போது பரபரப்பும் அவசரமும் மட்டுமே இருந்தது. ஆனால் தனது கரங்களுக்குள் பேரப்பிள்ளைகளை இறுக பற்றிய வண்ணம் வாகன நெரிசலை துல்லியமாக அவதானிப்பதிலும் எண்ணம் சிதறவில்லை. ஒரு வழியாக கல்லூரி கடைசி மணி ஒலிப்பதற்கு முன்னதாக பேரப்பிள்ளைகள் சென்றடைந்தது சிவத்தாருக்கு திருப்தியை தந்தது. வேகமாகவும் பதட்டத்துடனும் வந்த சிவத்தாருக்கு சற்று ஓய்வெடுக்க வேண்டும் போல் இருந்தது. கல்லூரிக்கு எதிரே இருந்த பூங்காவில் அவரைப் போலவே சில பாட்டன்களும் அம்மாக்களும் அமர்ந்திருந்தனர். காலை குளிரை விழுங்கும் சூரியக் கதிரின் கதகதப்பில் கொங்கிரிட் இருக்கையில் அமர்ந்து கொண்டார். அமைதியும், சூழலும் மனதின் இறுக்கத்தை தளர்த்தியதை உணர்ந்தார்.உடல்தான் அங்கிருந்தது எண்ணங்கள் காலவோட்டத்தை பின்னகர்த்தியது.
"வீரகேசரியில உங்கட சிறுகதை வந்திருக்காமே.. அன்பு சொன்னவள். நீங்க எனக்குச் சொல்லவேயில்லையே?" சமையலறையிலிருந்து விசாலத்தின் குரல் வந்த திசையை நோக்கினார்.
அப்போதுதான் சிவத்தாருக்கே தெரிய வந்தது இரண்டு மாதங்களுக்கு முன்னர் தபாலில் அனுப்பிய சிறுகதை இவ்வாரப் பத்திரிகையில் வெளியாகி இருப்பது. "ஓ அப்படியோ விசாலம், சத்தியமா எனக்கே தெரியாது.. சரி நான் வேலையால வரைக்க பேப்பர் எடுத்துக்கொண்டு வாரன். நீயும் வாசித்து எப்படியிருக்கெண்டு சொல்லு"
"ம் சரி சரி என்னத்த எழுதிறியள் எங்கெல்லாம் அனுப்புறியள் என்று எனக்குத் தெரியாமல்தானே நடக்குது..." "விசாலம் நீதானேயப்பா என்ட முதல் விமர்சகி, நீ படிச்சிட்டு கதை எப்படி என்று சொல்ல வேணும் என்றது தானே எனக்கு ஆசை" மனைவியை குளிர்மைமைப்படுத்த சிவத்தார் கூறினாலும் அதுதான் உண்மை. அவர் எழுதுவதை படித்து அவரை பாராட்டுவதிலும் விமர்சிப்பதிலும் மனைவிக்கு தான் முதலிடம் கொடுப்பார். விசாலம் வாசிப்பில் மிகவும் ஆர்வம் உள்ளவர் என்பதாலோ தெரியவில்லை சிவத்தாருக்கு தன் மனைவியுடனே இலக்கிய உரையாடலை பேசி மகிழ்வதில் அலாதி பிரியம்.
முகத்தின் மீது விழுந்த இலை ஒன்றின் உரசலால் மீண்டும் சுயநினைவுக்குள் வந்த சிவத்தாரின் கண்களில் கண்ணீர்த் துளிகள் கசிந்திருந்தது. விசாலம் அவரை விட்டுப் பிரிந்து இரு வருடங்கள் கடந்துவிட்டது, அது மட்டுமல்லாது அவருடைய பேனாவும் உறங்கிப் போனது. ஆயிரம் உறவுகள் வந்தாலும், தனக்கென பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் இருந்தாலும் தனக்கே பிடித்த வாழ்க்கையை வாழ்ந்துவிட எல்லோராலும் முடிவதில்லை. சிவத்தாருக்கு விசாலம் மூலம் அப்படி ஒரு அதிர்ஷ்டம் கிடைத்திருந்தது. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என நினைத்துக் கொள்வார். காற்றின் வேகத்தை விஞ்சி பெருமூச்சொன்று...
மருமகள் கூறிய கடமைகள் ஞாபகத்திற்கு வந்தது.பக்கவாட்டில் வைத்திருந்த பையுடன் சலீம் கடையை நோக்கி நகர்ந்தார். நாட்டின் பொருளாதாரச் சீர்கேட்டால் பொருட்களின் விலை மலைபோல உயர்ந்திருந்தது. மாமிசம் உண்பவர்களை விட மரக்கறி உண்பவர்களுக்கே அதிக செலவாகும் காலமாக மாறிவிட்டது. மரக்கறிகளின் விலை கிலோ ஆயிரம் ரூபாவை தாண்டி விட்டதை நினைக்கும் போது வறிய நிலையில் உள்ள மக்களது உணவு தேவை எப்படி சமாளிக்கப்படுகிறது எனும் அச்சமும் தோன்றியது. கொண்டு வந்த ஆயிரம் ரூபாவிலே வெங்காயம், பச்சைமிளகாய் உட்பட இரு மரக்கறிகளுக்கு மேல் வாங்க முடியாது போய்விட்டது. மருமகள் எதிர்பார்த்த அளவு இருக்குமோ தெரியவில்லை என எண்ணிக்கொண்டார்.
வீட்டின் முன்னே சாய்வு நாற்காலியில் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சிவத்தாரை நோக்கி பேத்தி ரேணு கலங்கிய கண்களுடன் நகர்ந்து வருவதை கண்டவுடன் "என்னாச்சு தங்கம் ஏன் ரேணுகுட்டியின் முகம் சரியில்ல" என்று பேத்தியின் கைகளைப் பிடித்து பக்கத்தில் எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டு காரணத்தை கேட்பதற்கு எத்தணித்தார். ஆனாலும் விம்மி விம்மி கண்ணீர் மட்டுமே சொரிந்த பேத்தியின் வாயிலிருந்து பதில் எதுவும் வரவில்லை.
அந்தப் பக்கம் வந்த மருமகளின் முகத்தை கலக்கத்துடன் பார்த்தார் சிவத்தார்.
மாமனாரின் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவளாக "பெருசா ஒன்றுமில்லை மாமா ரேணுவை பேச்சுப்போட்டியில் சேர்த்திருக்கிறார்களாம், அதுக்கு பேச்சொன்றை தயார்படுத்தி ஐந்து நிமிடத்தினுள் பேச வேணுமாம், உடனே பேச்சுக்கு பாடமாக்க எழுதி தரட்டாம் என்று அடம் பிடிக்கிறாள்" "நான் என்ன செய்யிறதெண்டு சொல்லுங்கோ மாமா" என்று விடயத்தை போட்டுடைத்தாள்.
அமுதாவிற்கு மாமனாரை பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. அவள் பல வருடங்களாக வெள்ளவத்தையிலேயே வளர்ந்து, படித்து பல்கலைக்கழகம் சென்று அங்கேயே வண்ணனை திருமணம் செய்து பின் தாய்வீட்டிலேயே வாழ்பவள். உயர்ந்த படிப்பு அதற்கேற்ற தொழில் வசதியான வாழ்வு என்ற சிந்தனைக்குள் இருந்ததால் அதைத்தாண்டி பலதையும் அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லையோ தெரியவில்லை.
வண்ணன் கொழும்பில் சர்வதேச தனியர் நிறுவனமொன்றில் காணக்காளராக பணிபுரிகிறான். அதனால் கொழும்பில் உள்ள பெண்ணையே திருமணம் செய்து இங்கே இருக்க வேண்டும் என கறாராக இருந்ததால் அமுதாவை பேசி திருமணம் செய்து வைத்தார்கள். வெள்ளவத்தையில் அமுதாவிற்காக அவர்களின் பெற்றோரால் வீடு கொடுக்கப்பட்டதால் எவ்வித இடருமின்றி அவர்களது வாழ்க்கை நகர்ந்தது. அமுதா பட்டதாரியாக சிறந்த பணியில் இருந்தாலும் வண்ணனின் பேச்சைக் கேட்டு பிள்ளைகள் பிறந்ததும் வேலைக்கு செல்வதை நிறுத்திக் கொண்டாள். சிவத்தாரும விசாலத்தின் மறைவிற்குப் பின் பேரப்பிள்ளைகளின் பிணைப்பால் மகனுடனேயே இருந்து விட்டார்.
பேத்தியின் கண்களை துடைத்தபடி நெற்றியில் முத்தமிட்டு "எங்கட செல்லத்துக்கு இப்ப என்ன வேணும்.. பேச்சு எழுத வேணும் அவ்வளவு தானே" அவர் கூறியதும் கண்கள் மலர்ந்த ரேணு தலையை மேலும் கீழும் ஆம் என்பது போல அசைத்தாள். "தங்கத்துக்கு நான் எழுதித்தாறன் நாளைக்கு வகுப்பாசிரியரிடம் காட்டி பாடமாக்குங்கோ சரிதானே" ரேணு மேலும் உற்சாகமானவளாக பாட்டனை கட்டித்தழுவி கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டு கொண்டாள்.
அன்று பாடசாலை கலை நிகழ்வுக்கு பேத்தியின் கட்டாயத்தின்பேரில் கல்லூரிக்குள் செல்ல வேண்டியேற்பட்டது. அமுதாவுடன் ரேணுவையும் முன்னால் அனுப்பிவிட்டு பார்வையாளர்களுக்கான இருக்கையில் ஒதுக்கப்புறமாக அமர்ந்து கொண்டார் சிவத்தார். கலைவிழா சிறார்களின் ஆடல் பாடல்களால் களைகட்டத் தொடங்கியது. ரேணுவின் பேச்சைக் கேட்க ஆவலாய் இருந்த சிவத்தாருக்கு ரேணுவின் பேச்சு அடுத்ததாக என அறிவித்ததும் உற்சாகமானார்.
பேத்தியின் கம்பீரமான குரலும் அவள் முக பாவனைகளையும் கையசைவுகளையும் பார்க்கும் போது கண்கலங்கியே போனார். அவர் அங்கே ரேணுவை பார்க்கவில்லை விசாலத்தை பார்த்ததாகவே உணர்ந்தார். பேச்சு இறுதியில் ரேணு அவையோருக்கு நன்றி கூறிவிட்டு அவையோரை பார்த்து "எனக்கு இந்த பேச்சை எழுதித் தந்தது எனது அப்பப்பா எழுத்தாளர் பொன்.சிவனேசன், அவருக்கு இந்த அவைதனிலே நன்றியை கூறிக் கொள்கிறேன்" என்று கூறிவிட்டு மேடையை விட்டு இறங்கினாள். சிவத்தார் ஒரு கணம் உடைந்தே போனார் ஆனந்தமா, அதிர்ச்சியா கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது. அவரை நோக்கி ஓடிவந்த பேத்தியை தூக்கி முத்தமிட்டு கொண்டு "நல்லா பேசினீங்க தங்கம் அருமையா இருந்தது" என்றார் "அப்பப்பா நீங்க எழுதுறது சூப்பரா இருக்கு.. பாடமாக்க இலகுவாகவும் இருக்கு.. நீங்க இனி எனக்கு குட்டி கதைகள் எழுதித்தாங்கோ என்ன" என உத்தரவிட்டாள். சிவத்தார் புன்னகைத்தபடி மனதினுள்ளே பேசிக்கொண்டர் "விசாலம் நீதானே எனக்காக வந்திருக்கிறாய்" மீண்டும் பேத்தியின் நெற்றியில் முத்தமிட்டுக்கொண்டு கண்களைத் துடைத்தார்.
கனக.தீபகாந்தன்




