முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
வாசிப்போம் சுவாசிப்போம்

“என்னைப் போல” - ஆதவன் சரவணபவன்

முன்னால் நீண்டு போகும் வானம் முடிவில்லாமல் தொடரத் தான் போகிறது. பயணத்தை வானம் போல நீட்ட முடியாது. குளிர் காற்று புற்தரையைத் தாண்டி மென்மையாகத் தழுவிக் கடப்பதை என்னவென்று சொல்வது? கிளர்ச்சி தரும் புத்துணர்ச்சியை இழக்கவும் விருப்பமில்லை. எல்லை தெரியாத தூரத்துக்கு செல்லவேண்டிய பயணத்தை நிறுத்தவும் மனமில்லை. பொய். இந்தக் கிளர்ச்சி பொய்யில்லை. தூரம் பொய். அதற்கு எல்லையுண்டு. பயணம் தடைப்பட எத்தனையோ காரணங்கள் உண்டு. ஊர் முடியப்போகிறது. சாங்கி விலேஜ் சந்தி. வலப் புற மூலையில் ராமர் ஆலயம். காலை ஆறரையளவில் ஒற்றை மேளத்துடன் கிலுங்கும் மணியோசை காற்றில் கலந்து பரவுகிறது. காற்று வேகமாக வீசுகிறது. அதன் மென்மை செத்துக் கொண்டிருக்கிறது. உப்புக்காற்று நாசை அரிக்கத்தொடங்குகிறது. தனியாக எதிர்க்காற்றுக்குக்கு மிதிவண்டியை வலித்துக் கொண்டிருக்கிறேன். உப்புக்காற்றில் சேற்று மணம் கலந்திருக்கிறது. சேற்று மணமா செத்த எலியா என்று வேறுபிரித்தறிய முடியவில்லை. போகும் வழியெல்ல்லாம் பலர் இறந்து கிடக்கிறார்கள். சிலர் அண்ணாந்தும் சிலர் குப்புறவும் சிலர் பக்கமாக ஒருங்கழித்தும் கிடக்கும் அவர்களின் உடல்கள். புதிதாக இறந்தவர்கள். இந்த வாடைக்கும் அவர்களிற்கும் சம்பந்தமில்லை. முதல் நாள் இரவில் இறந்திருக்கவேண்டும். இரத்தம் வழிந்தோடியிருக்கிறது. உலராத இரத்தம். இன்னும் இலையான் மொய்க்கவில்லை. புது இரத்தத்தின் வாடையை அவற்றைக் கடக்கும் போது உணர்கிறேன். துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் சிறிய துளைகளாக தெரிகின்றன. சில துளைகளில் செங்குருதி கொப்பளிக்கிறது. நிர்வாண உடல்களின் எண்ணிக்கைகள் பெருகுவது குறித்த பிரக்ஞ்யை எனக்கில்லை. அவற்றின் நிறங்களை மனது எண்ணிக்கொள்கிறது. எனது நிறத்துக்கும் அவற்றுக்கும் ஒற்றுமை இருக்கிறதா? என்னைப் போல முகவமைப்பு இருக்கிறதா? எனது உயரம் இருக்கிறதா? என்னைப் போல, என்னைப் போல மண்டைக்குள் மீண்டும் மீண்டும் உரத்துக் கத்துகிறது இந்த ஓநாய். ஓநாய்களைத் தேடும் ஓநாய். ஓநாய்கள் போல மனிதர்கள். மனிதர்களைப் போல ஓநாய்கள். நான் மனிதனா? ஓநாயா? நான் ஊளையிடவில்லை. நான் கொலைசெய்ய ஓடவில்லை. பசியாற்ற மாமிசத்துக்கு கொலைசெய்யவேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால் நான் ஊளையிடுகிறேன். கொலை செய்ய ஓடுகிறேன். பசியாற்றக் கிடைத்ததைப் பறித்துக்கொள்கிறேன். அருகில் நிற்கும் என்னைப் போன்றவர்களுக்கு கொடுப்பதற்கு மனமில்லை. நான் பலர் கூடும் இடங்களில் தான் ஊளையிடுகிறேன். என்னைப் போன்றவர்கள் சேர்ந்து ஊளையிடுவது கிளர்ச்சியை தூண்டுகிறது. உடல் கொந்தளிப்படைகிறது. என்னைப் போலவே எனது கருத்துக்களும் எனது உணவையும் எனது உடையையும் அவர்கள் அணிந்திருப்பதால் நான் அவர்கள் மத்தியில் பாதுகாப்பாக உணர்கிறேன். மீண்டும் நாசியில் உப்புக்கு காற்றின் ஆதிக்கம். பிணவாடையும் சேற்று நாற்றமும் அருகிவிட்டது. உப்பு நாசியை அரிக்கிறது. கிருமிகளைக் கொல்கிறது. சாங்கி கடற்கரை முடியப்போகிறது. வானம் இன்னும் நீண்டுகொண்டிருக்கிறது. ஊருக்குள் திரும்புகிறேன். மீண்டும் பிணவாடை. என்னைப் போல இருக்கும் சில பிணங்கள். ஒவ்வொரு உடலையும் நின்று பார்க்கிறேன். கண்கள் கலங்கின. இதயம் வெடித்து விடுவது போல முட்டி வீங்குகிறது. மனம் முழுதும் ரணம். கைகள் நடுங்குகின்றன. மூளைக்குள் வெறுப்பு முட்டுகிறது. என்னைப் போல இறந்தவர்களைக் கடந்து போக முடியவில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. மிதி வண்டியை விட்டு இறங்கினேன். என்னைக் கடந்து போக முனைந்த சிலரை தள்ளி விழுத்தினேன். கையிலிருந்த துப்பாக்கியால் ஒவ்வொருவரின் தலையிலும் தோட்டாக்கள் இறங்கின. அவர்கள் சரிந்து விழுகிறார்கள். நான் இப்போது தப்பியோட வேண்டும். என்னைப் போல இனி எவர் இறந்தாலும் நான் கொலை செய்வேன். மிதிவண்டியை எடுத்து வேகமாக மிதிக்கத் தொடங்கினேன். மனம் ஆசுவாசமாடைந்தது. பழிவாங்கல் ஆசுவாசம் கொடுப்பதை உணர்கையில் எழும் பரவசத்தில் ஊன்றி உழக்கினேன். மனம் திருப்தியடைகிறது. உடலில் பன்மடங்கு வலிமை. வானம் முன்னால் நீண்டுகொண்டிருக்கிறது. அதை வெல்ல முடியாதா? எல்லையைத் தொட முடியாதா? என்று ஏங்குகிறேன். பகல் முழுதும் ஓடிவிட்டேன். மீண்டும் இரவு. இந்த மரத்தின் கீழே உறங்கப்போகிறேன். மரத்தில் உடல்கள் தொங்குகின்றன. அவற்றுக்கு உயிரில்லை. சில கழுத்தில் தூக்குப்போட்டுக்கொண்டிருந்தன. சில இறுகக் கட்டி வைத்திருந்தன. அவர்களின் உருவம் இருட்டில் தெளிவாகத் தெரியவில்லை. நான் தூங்கிவிட்டேன். கன்ன வெயில் கூசச்செய்தது. கண்களைக் கசக்கி முகத்தைத் துடைத்துக் கொண்டேன். பிணங்களின் மேல் வெயில் படுவதால் அவை பளபளக்கின்றன. அவற்றிலிருந்து நிணம் வடியத் தொடங்கியிருக்க வேண்டும். வெள்ளிக் கம்பிகள் போல சொட்டுகின்றன. அந்த முகங்கள் என்னைப் போல இருக்கின்றன. எனக்கு மீண்டும் வெறி ஏற்படுகிறது. உடலை அசைத்துப் பார்க்கிறேன். முடியவில்லை. நான் கட்டப்பட்டிருக்கிறேன். மரத்தின் கொம்பில் தொங்கிக் கொண்டிருக்கிறேன். எனது உடலில் இருந்து இரத்தம் வழிகிறது. சில துளைகள் வழியே சூடான இரத்தம் வழிகிறது. உடல் வலிக்கிறது. சற்று முன்தான் சுடப்பட்டிருக்கிறேன். சுற்றி இருக்கும் உடல்கள் என்னைப் போல இருக்கின்றன. இப்போது மட்டும் எனக்கு கோபம் வரவில்லை. துக்கம் தொண்டையை அடைக்கிறது. என்னைப் போன்றவர்களுக்காக நான் என்னைக் கொடுத்தது ஏன் என்று தெரியவில்லை. நான் என்னை இழந்து சாதித்தது என்ன? நானில்லாத நான். என்னைப் போல் இருப்பவர்களை நினைத்து நானில்லாத நானாகி நிற்பது நரகத்தில் இருப்பதுபோல இருக்கிறது. முடிவில்லாத வெறி தள்ளிய நரகம் இது. என்னால் வானத்தின் எல்லையை அடைய முடியாது. வானம் பரந்து விரிந்தது.

இச்சிறுகதைக்கு பொருத்தமான படத்துடன் சிறுகதையின் பெயர் மற்றும் எழுத்தாளர் பெயருடன் வேண்டும.

பகிர்க

இதே பிரிவின் மேலும் பதிவுகள்

  • வாசிப்போம் சுவாசிப்போம்

    அவளாகி வந்தவள் -கனக.தீபகாந்தன்

    வழமையைப் போல சிவத்தார் தனது பேரப்பிள்ளைகளை கல்லூரிக்குக் கூட்டிச் செல்ல ஆயத்தமானார். காலை ஏழு மணியாகியிருந்தது, பேத்தி ரேணு இன்னும் தலை பின்னவில்லை என சிணுங்கிய வண்ணம்…

    மேலும் வாசிக்க →
  • வாசிப்போம் சுவாசிப்போம்

    பாத்தியதை என்ற நாவலை முன்வைத்து - வேலையா சதீஸ்குமார் (திருகோணமலை)

    இலக்கியம் என்பது உண்மையில் ஆழப் பதிந்த சமூகப் பிரக்ஞையின் வெளிப்பாடு என்பார் பேராசிரியர் கா. சிவத்தம்பி. உலகில் வாழும் ஈழத்தின்…

    மேலும் வாசிக்க →
  • வாசிப்போம் சுவாசிப்போம்

    குறுங்கதை. ..ஷெல்லிதாசன்...

    ============ ============= என்னைப் பார்த்துச் சொல்லு..! "என்ன மச்சான் உனக்கு காசு மிஞ்சிட்டுது போலை" "ஏனடாப்பா...ஏன்?" 'உன்னை காலையிலை நான் சந்திச்சிட்டுப் போகேக்கை என்ன…

    மேலும் வாசிக்க →