முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
வாசிப்போம் சுவாசிப்போம்

வான் சென்டனின் நாட்குறிப்பு. திரு.வ.முரளிதரன்

The Diary of Van Senden வான் சென்டனின் நாட்குறிப்பு என்பது1786- ல் ஜாக் ஃபேப்ரிஸ் வான் செண்டன் என்னும் டச்சு காலனித்துவ அரசின் திருகோணமலைக்கான நிரந்தர நிர்வாகியால் எழுதப்பட்ட ஒரு புகழ்பெற்ற வரலாற்றுப் பயண நாட்குறிப்பு ஆகும் .
கலாநிதி கனகசபாபதி சரவணபவன் அவர்களினால் அதன் மூலப்பிரதி பாதுகாக்கப்பட்டிருக்கும் நெதர்லாந்து தேசிய ஆவணக் காப்பகத்திலிருந்து நகலெடுக்கப்பட்டு, அவற்றை டச்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு The Diary of Van Senden - Dutch Governor of Trincomalee Ceylon,1786 எனும் பெயரில் 2024 இல் வெளியிடப்பட்ட நேரடி மொழிபெயர்ப்பு ஆங்கில நூலாகும். குறிப்பாக டச்சு மொழியிலிருந்து நேரடியாக ஆங்கில மொழிக்கு பெயர்க்கப்பட்டதால் மூலத்திலிருந்து உள்ளடக்கத்தில் எவ்வித மாற்றங்களுமின்றி மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையின் வரலாற்றை ஆய்வு செய்வதற்கு இலக்கியங்கள், வாய்மொழி வரலாறு, கல்வெட்டுக்கள், தொல்லியல் சான்றுகள், காலனித்துவ ஆவணங்கள், ஆகிய அனைத்தும் முக்கியமான மூலங்களாக அமைகின்றன. குறிப்பாக ஐரோப்பிய கால ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட பயணக் குறிப்புகள், நாட்குறிப்புகள், நிர்வாக அறிக்கைகள் போன்றவை அக்காலத்து திருகோணமலை அரசியல்,பொருளாதார, பண்பாட்டு, மற்றும் மத வாழ்க்கையை அறிந்துகொள்வதற்கு உதவக்கூடிய முதன்மை வரலாற்று ஆதாரங்களாகும்.

இந்தப் பின்னணியில் வான் சென்டனின் நாட்குறிப்பு எனும் ஆவணத்தை மொழிபெயர்த்தமையானது ஒரு சாதாரண மொழி பெயர்ப்பு பணியாக மட்டும் அமையாது. அது திருகோணமலையில் மறைக்கப்பட்ட அல்லது போதிய அளவில் ஆவணப்படுத்தப்படாத வரலாற்று தகவல்களை தமிழ் ஆய்வு உலகுக்கு கொண்டுவரும் முக்கியமான அறிவுசார் முயற்சியாக அமையும் .

1786 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வான் செண்டன் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் மேற்கொண்ட பயணத்தின் அவதானிப்புகள் இந்நாட்குறிப்பில் இடம்பெறுகின்றன. குறிப்பாக கொட்டியாரம், தம்பலகாமம், கட்டுக்குளம் ஆகிய பிராந்தியங்கள் பற்றிய தகவல்கள் இதில் காணப்படுகின்றன.

இந்த நாட்குறிப்பு நான்கு முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. முதலாவது கொட்டியாரம் பிரதேசத்திற்கான பயண குறிப்புகள், இரண்டாவது அப்பிரதேசத்தின் விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள், மூன்றாவது தம்பலகாமம் பிரதேசம் தொடர்பான அவதானிப்புகள், நான்காவது கட்டுக்குளம் பிரதேசம் தொடர்பான தகவல்கள்.
இந்நாட்குறிப்பின் சிறப்பு என்னவெனில் டச்சு நிர்வாகியின் தனிப்பட்ட அவதானிப்புகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களுடன் அவர் நடத்திய உரையாடல்கள், மக்களின் வாழ்வாதார நிலை, விவசாய பிரச்சனைகள், இயற்கைச் சூழல், பழைய குடியிருப்புகள், கோயில்கள்,கல்வெட்டுக்கள், நீர்ப்பாசன அமைப்புகள் ஆகியவை பற்றிய தகவல்களும் இதில் பதிவாகியுள்ளன.முக்கியமாக கங்குவேலி கல்வெட்டு படியெடுக்கப்பட்டு இந்தநாட்குறிப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

என் நூலானது திருகோணமலையின் வரலாறு சம்பந்தமான ஆய்வுப் பரப்பில் காலனித்துவ ஆவணங்களை ஜனநாயகப்படுத்துகின்ற பெரும்பணியை செய்கின்றது. காலனித்துவ காலத்தில் உருவாக்கப்பட்ட பல முக்கிய ஆவணங்கள் டச்சு, ஆங்கிலம் போன்ற மொழிகளில் உள்ளன. மொழித்தடைகளினால் இவற்றை தமிழ் ஆய்வாளர்கள், மாணவர்கள், உள்ளூர் வரலாற்று ஆர்வலர்கள், மற்றும் பொது வாசகர்கள் நேரடியாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. இதனை நிவர்த்திசெய்யும் முகமாகவே கனகசபாபதி சரவணபவன் அவர்களின் நூலான ‘காலனித்துவத் திருகோணமலை‘ என்னும் நூலில் இந்நாட்குறிப்பின் தழிழ் மொழிபெயர்ப்பு எற்கனவே முழுமையாகத் தரப்பட்டிருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

இந்த ஆவணத்தின் மொழிபெயர்ப்பு திருகோணமலையின் வரலாற்றை எழுதுவதில் மூன்று முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். முதலாவது இதுவரை காலமும் பரவலாக பயன்படுத்தப்படாத பதினெட்டாம் நூற்றாண்டின் ஆவணச் சான்றுகள் திருகோணமலை ஆய்வுலகிற்கு கிடைக்கும். இதனால் திருகோணமலையின் வரலாற்றை எழுதுவதற்கான புதிய தரவுகள் உருவாகும்.
இரண்டாவதாக கொட்டியாரம், மூதூர், கங்குவேலி, தம்பலகாமம், கட்டுக்குளம் போன்ற பிரதேசங்களின் வரலாற்றை தனித்தனியாக ஆய்வு செய்வதற்கான அடித்தளம் கிடைக்கும். அத்துடன் அப்பிராந்தியங்களின் கிராமங்களின் தோற்றம், நில உடமை, பாரம்பரிய தொழில்கள், குடியேற்ற மாற்றங்கள், ஆகியவற்றை ஆவணப்படுத்த முடியும்.

மூன்றாவதாக காலனித்துவ ஆவணங்கள் எவ்வாறு உள்ளூர் மக்களின் வரலாற்றை பதிவு செய்தன, எவற்றை பதிவு செய்யத் தவறின, எவ்வாறு அதிகாரத்தின் பார்வையில் சமூகத்தை பிரதிநிதித்துவ படுத்தின, என்பதை ஆராய்வதன் மூலம் வரலாற்று அறிவின் மீதான விமர்சனப் பார்வையை விசாலிக்க முடியும்.

இதனால் திருகோணமலையின் வரலாறு காலனித்துவ நிர்வாகத்தின் பார்வையில் மட்டும் அல்லாமல் அங்கு வாழ்ந்த மக்களின் அனுபவங்கள், சமூக நினைவுகள், பண்பாட்டு மரபுகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் மறு வாசிப்பு செய்யப்படலாம்.

எனவே இந்நூலினை ஒரு தனிப்பட்ட நூல் வெளியீடாக கருதாமல் திருகோணமலையின் ஆவணப்படுத்தப்படாத வரலாற்றை மீட்டெடுக்கும் நீண்டகால ஆய்வுத் திட்டத்தின் முதன்மையான கட்டமாக கருதுவது பொருத்தமானது. இது எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தின் கிராம வரலாறு, தமிழ் சமூக வரலாறு, நில உடமை வரலாறு, காலனித்துவ வரலாறு, மற்றும் பண்பாட்டு வரலாறு, ஆக்கியவற்றை ஆதார பூர்வமாக எழுதுவதற்கான சிறந்த உசாத்துணையாக அமையும் மிக முக்கியமான ஆவணமாகும் என்பதில் ஐயமில்லை.

பிரதி.

பகிர்க

இதே பிரிவின் மேலும் பதிவுகள்

  • வாசிப்போம் சுவாசிப்போம்

    “என்னைப் போல” - ஆதவன் சரவணபவன்

    முன்னால் நீண்டு போகும் வானம் முடிவில்லாமல் தொடரத் தான் போகிறது. பயணத்தை வானம் போல நீட்ட முடியாது. குளிர் காற்று புற்தரையைத் தாண்டி மென்மையாகத் தழுவிக் கடப்பதை…

    மேலும் வாசிக்க →
  • வாசிப்போம் சுவாசிப்போம்

    அவளாகி வந்தவள் -கனக.தீபகாந்தன்

    வழமையைப் போல சிவத்தார் தனது பேரப்பிள்ளைகளை கல்லூரிக்குக் கூட்டிச் செல்ல ஆயத்தமானார். காலை ஏழு மணியாகியிருந்தது, பேத்தி ரேணு இன்னும் தலை பின்னவில்லை என சிணுங்கிய வண்ணம்…

    மேலும் வாசிக்க →
  • வாசிப்போம் சுவாசிப்போம்

    பாத்தியதை என்ற நாவலை முன்வைத்து - வேலையா சதீஸ்குமார் (திருகோணமலை)

    இலக்கியம் என்பது உண்மையில் ஆழப் பதிந்த சமூகப் பிரக்ஞையின் வெளிப்பாடு என்பார் பேராசிரியர் கா. சிவத்தம்பி. உலகில் வாழும் ஈழத்தின்…

    மேலும் வாசிக்க →