முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
வாசிப்போம் சுவாசிப்போம்

உதிரப் பூக்கள்... மது வர்மன் Part-02

கயலின் முகம் சோர்ந்து இருந்தாலும், ஒரு பெரிய போரில் வென்ற திருப்தியுடன் கார்த்தியை பார்த்து கண்களால் புன்னகைத்து விட்டு போர் முடிவடைந்த களைப்பில் கண்களை மூடிக்கொண்டாள்.
ஒருவித அமைதி, ஒரு புதிய விடியல் பிறந்தது. மருத்துவ ஆயுதங்களின் உதவி இன்றி கார்த்தியின் அன்பும், கயலின் மனவலிமையும் மட்டுமே அந்த பிரசவத்தை வெற்றிகரமாக முடிவுற செய்தது.

இருந்தாலும், அவளால் எழுந்து இருக்கவோ, நிற்கவோ நடக்கவோ, முடியவில்லை. உயிரை தாங்கும் வலிமையை உடல் இழந்தது போல ஒரு கணத்தில் அவள் கண்கள் செருகி, அவளது உணர்வுகள் இருண்டு போக, மூச்சுக்காற்று மட்டும் மெலிதாக வந்து போனதை தவிர ஒரு சடமாகவே எண்ணத் தோன்றுமளவிற்கு எந்தவித அசைவுமின்றி அவள் வீழ்ந்து கிடந்தாள்.

பட்டுக்குட்டியின் வருகையினை ஊரிலுள்ள இரு வீட்டாருக்கும் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தகவல் தெரிவித்த கார்த்தி கயலின் நிலை கண்டு அடுத்த நிமிடமே கண்கள் இருண்டு, கால்கள் தள்ளாடி, வெளுத்துப்போன முகத்தோடு, உடல் முழுவதும் ஒரு நடுக்கம் பரவ "அம்மாய் என்னாச்சு உனக்கு? நீ ஜெயித்து விட்டாய். பட்டுக்குட்டிக்காகத்தானே இவ்வளவு போராட்டம். பட்டுக்குட்டியை பார். உன்னை போலவே இருக்கிறாள்" என கயலின் கன்னங்களை தட்டினான்.

கண் விழித்துப் பார்த்தாள், மீண்டும் மயக்கமுற்றாள்.

கனத்த இதயத்துடன் "எமக்கு இந்த பட்டுக்குட்டியே போதும். இனி இன்னொரு பட்டுக்குட்டி வேண்டாம் அம்மாய். என்னால் உன்னை இந்த நிலைமையில் பார்க்க முடியவில்லை. எழும்பம்மா" என மயக்க நிலையில் இருந்த கயலின் தலையை வருடிக்கொண்டே, பட்டுக்குட்டியையும் அனைத்து கொண்டான்.

உடல் மிதப்பது போன்ற ஒரு லேசான உணர்வு. அதே சமயம் உடலை அசைக்க முடியாத ஒரு பிடிமானம். அடிவயிற்றில் ஒரு மரத்துப்போன வலியும், தொண்டையில் ஒரு வறட்சியும், மெல்ல எட்டிப் பார்க்க சட்டென இதயம் துடிக்க, நீண்ட போர் பயணத்தை முடித்த களைப்பு ஒரு புறம் இருந்தாலும், அவளது மனம் கார்த்தியையும், பட்டுக்குட்டியையும் தேடியது. பட்டுக்குட்டியின் அழுகுரல் "குழந்தை எப்படி இருக்கின்றது" என்ற தவிப்பு வார்த்தைகளாக வராமல் கயலின் கண்களில் கண்ணீராக திரண்டு கொண்டிருந்தது.

கார்த்தி பட்டுக்குட்டியை கயலின் மார்பிலே அனைத்து படுத்தினான்.

வலிகள் யாவும் ஒரு நொடியில் விடை பெற தன் ரத்தத்தின் ஒரு துளியை ஒரு உயிர் வடிவில் காணும் அந்த முதல் நொடியில் கயல் மீண்டும் ஒருமுறை பிறந்தாள்.

மூன்று நாட்களுக்குப் பின் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு வந்த கயல் இரவு 10 மணி குழந்தை அழுகை ஓய்ந்திருக்க, உடல் வலியால் நகர முடியாமல் கட்டிலில் சாய்ந்த வண்ணம் மெதுவாக தன் தாய்க்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திக் கொண்டாள்.

"அம்மா என்ன செய்கிறாய்? தூங்கிட்டியா?"

"இல்லையாம்மா. உன் நினைப்பாவே இருந்துச்சு பேர்த்தி என்ன செய்கிறாள்? தூங்கிட்டாளா? நீ சாப்பிட்டியா?

குரல் தழுதழுக்க இப்ப தான் தூங்கினாளம்மா. கார்த்தி சமைத்து வச்சிட்டு வேலைக்கு போனாரு, வேலை முடிஞ்சு வர கொஞ்சம் தாமதமாகும். நான் சாப்பிட்டேன் அம்மா" என்றாள் கயல்.

" கயல் என்ன குரல் ஒரு மாதிரி இருக்கு" என சந்தேகத்துடன் கேட்டாள் கயலின் அம்மா.

"தையல் போட்ட இடத்தில ஒரு விதமான எரிச்சலோடு சேர்ந்து வலி உட்கார்ந்து எழுந்திருக்கவே முடியல. அதோட எப்படிமா இருந்து குழந்தைக்கு பால் குடுக்குறது. கஷ்டமா இருக்கு.

"ஐயோ! நான் அனுப்பிவிட்ட மூலிகை இலைகளை வெந்நீர் வச்சு கலந்து நல்ல குளியல் போடு கயல். நானும் இந்த கஷ்டமான நேரத்துல உன்னோட இருக்க முடியாமல் போயிட்டு என்று தான் எனக்கும் கவலை".

" கவலைப்படாத அம்மா நான் வீட்ட வந்துட்டேன் தானே கார்த்தி என்னோட இருந்தால் நீ இல்லை என்ற குறையே எனக்கு தெரியாது. குழந்தை பிறந்ததும் மூன்று நாட்களுக்கு பிறகு தானே என்ன வீட்டை விட்டாங்க. அங்க இரவில் பொம்பிளயல தான் உதவிக்கு விடுவாங்க அதனால கார்த்தியும் இல்லாமல் நான் உன்னை நினைத்து கவலைப்பட்டேன்.

"ஏன் கயல் உதவிக்கு யாரும் வரலயா?"

"இல்லையம்மா, எத்தனையோ உறவுகள் இருந்தும், கயல் இன்றைக்கு இரவு உனக்கும், குழந்தைக்கும் ஒத்தாசையா உதவிக்கு நாங்கள் வாரோம் என்று மன ஆறுதலுக்கு கூட யாருமே வார்த்தைகளால் கூட என் மனதை குளிர பண்ணல அம்மா" என கண் கலங்கினாள் கயல்.

" எத்தனையோ பேருக்கு நான் பிரசவம் பார்த்தேன். படுக்கை துணி துவைத்தேன். ஆனால் இன்று என்ர புள்ளைக்கு என்னால் எதுவும் செய்ய முடியாமல் போயிட்டே. பாவம் நீ தனியாக எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாய்? " என கயலின் அம்மா அழுதாள்.

" ஓமம்மா சொல்றதுக்கு வார்த்தையே இல்லை. உடம்பில ஒரு இடத்தில கூட வலி இல்லாத இடமே இல்லை. முதுகுத்தண்டு அப்படியே ரெண்டா உறையுற மாதிரி இருந்துச்சு. கை,கால் பதற்றமும் போகல. கண்ணுல தூக்கமில்லை, கலைந்து போன தலைமுடியோட, குனிஞ்சு நிமிட முடியாமல் இடுப்பு வலியும் தாங்க முடியாமல் இருந்த எனக்கு, சரியாகப் பால் குடிக்க தெரியாமல் என்ர குழந்தையும் ஓய்வில்லாமல் அழுதுகிட்டு இருந்தாள். என்னால குழந்தையை தூக்கவே முடியாமல் போயிட்டு, உடம்பு இயலாமல் இருக்கு, மயக்கமா வருது. யாராவது குழந்தை அழுது தூக்கி வச்சிருங்க என்று கூப்பிட கூட ஒரு ஆள் இல்லாமல் தவிச்சன். காலும் வலிக்குது., கையும் வலிக்குது, கழுத்தும் வலிக்குது, முதுகுத் தண்டுவடம் அப்படியே இரண்டா உடையுற மாதிரி இருக்கு.,நிற்குறதும், நடக்குறதுமாக தான் குழந்தையை கையில வைச்சிருந்தேன்., பாத்ரூமும் போகணும் போல இருக்குது தையல் போட்ட வலியால போகவும் முடியல, இப்படி தான் அந்த மூன்று நாட்களும் தூக்கமில்லாமல் இரவும் பகலாவே நீடிக்கும் அளவிற்கு நான் மிகவும் குழந்தையுடன் தனித்து கஸ்ரப்பட்டுட்டேன்" என்று வருந்தினாள் கயல்."

கடவுளே! எவ்வளவு உறவுகள் இருந்தும், என்னுடைய பிள்ளை யாரும் இல்லாத அனாதையாக தனித்து போராட வேண்டி போயிட்டே" என புலம்பினாள் கயலின் அம்மா.

" அம்மா எனக்கு யாரும் உதவிக்கு வரலை என்று நான் யார் மீதும் மனம் நோகவில்லை. யாரும் தேவையுமில்லை. "திக்கற்றவனுக்கு தெய்வமே துணை" எவ்வளவு கஷ்டம் வந்தாலும் மனசால சோர்ந்து போகக்கூடாது என்று கார்த்தி தந்த தைரியம் என் குழந்தைக்காக என்னால் தனியாக போராட முடியும் என்று எனக்குள் ஒரு வைராக்கியம் வந்துச்சு அதனால எனக்கு அந்த நேரத்துல மனம் உடைந்து ஒரு துளி கண்ணீர் கூட வரல. எனக்கு பயத்தை விடுத்து தன்னம்பிக்கையை அதிகமா இருந்துச்சு" என தன்னை பெருமைப்படுத்தினாள் கயல்.

"கயல் நீ ஒரு சாதாரண பெண்ணல்ல. மிகவும் தைரியமான பெண். உன்னை என் மகள் என்று சொல்வதற்கு பெருமையாக இருக்கிறது" என மேலும் மேலும் தைரியத்தை விதைத்தாள் கயலின் அம்மா.

எந்தவித கதை பேச்சும் இல்லாமல் சிறிது நேரம் அமைதியானாள் கயல்.

"கயல், பிள்ளை என்ன செய்யுற? தூங்கிட்டியா? என்ன சத்தத்தையே காணல"

பெருமூச்சு விட்டுக் கொண்டே "இருக்கிறேன் அம்மா. நான் தைரியமா இருந்தாலும், சில உறவுகள் என்னோட பேசிய வார்த்தைகள் மனசுக்கு ரொம்ப வலியா இருக்குமா"

" ஏன் கயல் என்னாச்சு? யாரு என்ன சொன்னாங்க?"

" மொழி தெரியாத இந்த நாட்டிலே யாருமில்லாமல் தனித்து புள்ளையுடன் ஆஸ்பத்திரியில கஷ்டப்படுகிறாளே! உடம்பு எப்படி இருக்குது? சாப்பிட்டியா? உதவிக்கு யாராவது இருக்காங்களா? ன்னு மன ஆறுதலுக்கு நான்கு வார்த்தைகள் பேசுவோம் என்று இல்லாமல் அழைப்பினை எடுத்து குழந்தை நோர்மலாகவா? ஆப்ரேஷன் மூலமாக பிறந்ததா? என்று கேட்கிறார்கள். அது மட்டும் அல்ல, தையல் போட்ட வலி சிறிதும் ஆறவில்லை அதிகரிக்கிறதே என வலியில் தவிக்கிறேன் பெண்ணுறுப்பில் எத்தனை தையல் போட்டது என்று கேட்கிறார்கள் அவர்களுக்கு அது ஒரு வேடிக்கையாக போச்சு நான் என்ன மெஷினாமா? "காயப்பட்ட ஒரு பறவையின் சிறகுகளை மீண்டும் மிதிப்பது போல இருந்துச்சும்மா" பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காக மடை திறந்த வெள்ளம் போல வந்த கோவத்தை எனக்குள் அடக்கி கொண்டேன்" என கயல் மன வேதனையுடன் தன் ஆதங்கத்தை கொட்டிக்கொண்டாள்.

"விடு கயல் அவங்க அப்படித்தான். ஒரு தாய் குழந்தையை பெற எவ்வளவு போராடுகிறாள். ஒரு உயிர் பிறப்பதற்கு முன்பு இன்னொரு உயிர் சிதைந்து, உருமாறி, உருக்குலைந்து போகும் அந்த சில மணி நேரங்கள் மிகப்பெரிய நரக வேதனை. அந்த நரக வேதனையின் முடிவில தான் அம்மா என்று அந்தஸ்தை அவள் பெறுகின்றாள். அதை உணர்ந்தவர்கள் உன்ன இப்படி எல்லாம் கேட்டிருக்க மாட்டார்கள் விடம்மா.

"அது மட்டும் இல்லை அம்மா. எங்கிட்ட கேட்கிறது போதாமல், கார்த்திக்கும் கோல் பண்ணி கேட்கினம் குழந்தை அப்பா மாதிரியா? அம்மா மாதிரியா? கறுப்பா? சிவப்பா? ன்னு ஒருத்தர் கேக்குறாரு, இன்னொருத்தர் தலை முடி இருக்கா? எடை எவ்வளவு போஸ்ட்மார்ட்டல் பண்ற மாதிரி கேக்குறாங்க. என் புள்ள ஆரோக்கியமா இருக்காளான்னு கேட்க யாருக்கும் அக்கறை இல்லம்மா. அவள் யாரை மாதிரி இருந்தா என்ன? என்ர உடம்புல இருந்து ஒரு உயிர் பிரிந்து வந்திருக்கு அந்த அதிசயத்தை விட அவங்களுக்கு நிறமும் முடியும் தான் முக்கியமா போச்சா?"

"கயல் நீ இப்ப ரொம்ப பலவீனமா இருக்குறா. இவங்களோட கேள்விகளை மனசுல போட்டு உன்னுடைய உடம்ப கொடுக்காத, உன்னுடைய புருஷன் உனக்கு கிடைத்த வரம். பாவம் என்ர மருமகன். வேலைக்கு போயிட்டு வந்து உடம்பு அலுப்பு என்று சலிப்பில்லாமல் வந்து, நீ பிள்ளையும் கவனிச்சுக்கொண்டு சமைக்கிறதும் கஷ்டம் என்று சமைத்து வச்சிட்டு, உன்னையும், உன்ர குழந்தையும் பார்த்துக்கிறார். நீயும், உன்ர புருஷனும், உன்ர பிள்ளையும் என்று இரு. உனக்கு யாருடைய கதையும் தேவையில்லை. குழந்தையை நீ கஷ்டப்பட்டு பெற்றெடுத்திருக்க, உன்ர வலி உனக்குத்தான் தெரியும், அவங்க அப்படி பேசுறது அது அவங்க அறியாமை முட்டாள்கள். அந்த பிஞ்சு முகம் சிரிக்கும் போது இந்த தையல் வலியும், இவங்களோட கேவலமான கேள்விகளும் உனக்கு ஞாபகமே இருக்காது. குழந்தை தூங்குற நேரத்துல நீயும் சேர்ந்தே தூங்கு. நான் நாளைக்கு உனக்கு கால் பண்றேன்" என கயலின் அம்மா தொலைபேசியை துண்டித்துக் கொண்டாள்.

"அம்மாவின் வார்த்தைகள் கயலின் மனப்பாரத்தை சற்று குறைத்தது. போனை வைத்துவிட்டு அருகில் படுத்திருந்த தன் மகளின் பிஞ்சு விரல்களை பற்றி கொண்டாள். உலகம் என்ன கேட்டாலும், இவளுக்காக தான் நானும், கார்த்தியும் வாழ வேண்டும் என்ற வைராக்கியம் அந்த வலியிலும் அவளுக்குத் துளிர்ந்தது.

பெண் என்பவள் வலிமையானவள் தான். ஆனால் தாயான பிறகு உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பாள். அவளுக்கு தேவைப்படுவது பாராட்டுக்கள் அல்ல. இளைப்பாற ஒரு தோளும், இதமான சில மணி நேர தூக்கமும் மட்டுமே.

உதவி செய்யமுடியா விட்டாலும் பரவாயில்லை இத்தகைய கேள்விகளை கேட்டு வலியை அதிகப்படுத்தாதீர்கள்.

பகிர்க

இதே பிரிவின் மேலும் பதிவுகள்

  • வாசிப்போம் சுவாசிப்போம்

    “என்னைப் போல” - ஆதவன் சரவணபவன்

    முன்னால் நீண்டு போகும் வானம் முடிவில்லாமல் தொடரத் தான் போகிறது. பயணத்தை வானம் போல நீட்ட முடியாது. குளிர் காற்று புற்தரையைத் தாண்டி மென்மையாகத் தழுவிக் கடப்பதை…

    மேலும் வாசிக்க →
  • வாசிப்போம் சுவாசிப்போம்

    அவளாகி வந்தவள் -கனக.தீபகாந்தன்

    வழமையைப் போல சிவத்தார் தனது பேரப்பிள்ளைகளை கல்லூரிக்குக் கூட்டிச் செல்ல ஆயத்தமானார். காலை ஏழு மணியாகியிருந்தது, பேத்தி ரேணு இன்னும் தலை பின்னவில்லை என சிணுங்கிய வண்ணம்…

    மேலும் வாசிக்க →
  • வாசிப்போம் சுவாசிப்போம்

    பாத்தியதை என்ற நாவலை முன்வைத்து - வேலையா சதீஸ்குமார் (திருகோணமலை)

    இலக்கியம் என்பது உண்மையில் ஆழப் பதிந்த சமூகப் பிரக்ஞையின் வெளிப்பாடு என்பார் பேராசிரியர் கா. சிவத்தம்பி. உலகில் வாழும் ஈழத்தின்…

    மேலும் வாசிக்க →